மைதாமாவு அரை கிலோ
கோதுமை மாவு கால் கிலோ
உப்பு ஒரு மேசைக்கரண்டி
சர்க்கரை 2 தேக்கரண்டி
எண்ணெய் ஒரு கப்
டால்டா 200 கிராம்

200 கிராம் டால்டாவை உருக வைத்து அரை கோப்பை சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் சேர்க்கவும்.
டால்டாவும், எண்ணெயும் நன்கு ஆறியவுடன் ஒரு தேக்கரண்டி மைதா மாவை அதில் போட்டு கட்டி இல்லாமல் நன்றாகக் கலந்து கொள்ளவும்.

அகன்ற பாத்திரத்தில் மைதாமாவு, கோதுமைமாவு, உப்பு, சர்க்கரை போட்டு நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு தண்ணீர் ஊற்றி மாவு மிகவும் மிருதுவாக இருக்குமாறு பிசைந்து கொள்ள வேண்டும்.
பிசைந்த மாவு உருண்டையின் மேல் அரை கப் ஆயில் ஊற்றி பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

அதன் பிறகு பிசைந்து வைத்துள்ள மாவுக் கலவையை ஒரு பெரிய எலுமிச்சம்பழம் அளவுக்கு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி செய்வது தட்டுவது போல் பெரிய வட்டமாக மெல்லியதாக தட்டிக் கொள்ளவும்.

அதன்மீது 2 தேக்கரண்டி டால்டா பேஸ்ட் வைத்து முழுவதும் தடவி விடவேண்டும்.
பிறகு புடவைக்குக் கொசுவம் வைப்பது போல் டால்டா பேஸ்ட் தடவி வைத்துள்ள பரோட்டா மாவை கையில் தூக்கிக் கொசுவம் வைக்க வேண்டும்.

இப்பொழுது நீளமாக வரும். அதை அப்படியே சுருட்டி வைக்க வேண்டும்.

பிறகு இந்த முறைபோல் எல்லா உருண்டைகளையும் செய்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். இதனை அரை மணி நேரம் ஊறவிடவும்.

நாம் சாப்பிடும் போது சுருட்டி வைத்துள்ள மாவு உருண்டையை சிறிது கனமாக வட்டமாக கையால் தட்டிக் கொள்ள வேண்டும்.

தோசைக் கல்லை நன்றாக சூடு செய்ய வேண்டும். தட்டி வைத்துள்ள பரோட்டாவை தோசைக் கல்லில் போட வேண்டும்.

தீயை சிறியதாக வைத்து வேகவிடவும். பொன்னிறமாக சிவந்ததும் திருப்பிப் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு முறுவலாக சுடவும்.

பிறகு அவற்றை எடுத்து நான்கு அல்லது ஐந்து பரோட்டாக்களை ஒன்றாக அடுக்கி கையால் இரண்டு புறமும் தட்டினால் மிருதுவான பரோட்டா தயார்.

Comments are closed.